தஞ்சை மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நீடிப்பு: 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


தஞ்சை மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நீடிப்பு: 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 6 Oct 2018 4:15 AM IST (Updated: 6 Oct 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தஞ்சை அருகே கள்ளப்பெரம்பூர் பகுதியில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. வடிகால் தூர்வாராததால் தண்ணீர் தேங்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று 4-வது நாளாகவும் மழை நீடித்தது. நேற்று காலை முதல் மழை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இந்த நிலையில் மதியம் மழை பெய்யத்தொடங்கியது. லேசான தூறலுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் பூதலூர், ஆலக்குடி, திட்டை பகுதிகளில் பெய்த மழை காரணமாக சம்பா சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

நேற்று காலை மழை இன்றி காணப்பட்டதால் தேங்கிய மழைநீர் வடியத்தொடங்கியது. ஆனால் மதியத்துக்குப்பின்னர் மழை பெய்யத்தொடங்கியதால் மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் அதிக பட்சமாக அணைக்கரையில் 51 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதேபோல் சூரக்கோட்டை பகுதியிலும் ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மழைநீர் வடிவதற்கான போதிய வசதி இல்லாததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. மழை நீர் வடிவதற்கு ஏதுவாக வடிகால்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கி உள்ளன.

மேலும் இதுவரை இந்த பகுதிகளை அதிகாரிகள் யாரும் பார்க்கவில்லை என்றும் அந்த பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். அதே நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா, தாளடி நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு:-

அணைக்கரை-51, பட்டுக்கோட்டை-35, மஞ்சளாறு-31, திருக்காட்டுப்பள்ளி-29, கல்லணை-26, நெய்வாசல் தென்பாதி-22, மதுக்கூர்-21, கும்பகோணம்-19, திருவையாறு-17, தஞ்சாவூர்-14, வெட்டிக்காடு-14, திருவிடைமருதூர்-15, பாபநாசம்-13, ஒரத்தநாடு-12, அய்யம்பேட்டை-10, குருங்குளம்-9, அதிராம்பட்டினம்-2, ஈச்சன்விடுதி-1.

Next Story