நீடாமங்கலம் அருகே நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்


நீடாமங்கலம் அருகே நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 5 Oct 2018 10:30 PM GMT (Updated: 5 Oct 2018 9:02 PM GMT)

நீடாமங்கலம் அருகே நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் பகுதியில் பரப்பனாமேடு, வீரவநல்லூர், மேலகடம்பூர், கீழகடம்பூர், கொண்டியாறு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1,200 எக்டேர் சாகுபடி நிலங்கள் உள்ளன. இதில் குறுவை அறுவடை செய்யப்பட்ட நெல்லை கடந்த 15 நாட்களாக வீரவநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து பரப்பனாமேடு ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாயி ராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சிங்காரவேலு, கைலாசம், பன்னீர்செல்வம், பழனிகுமார், சரவணன், சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் மலைமகள், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் கோவில்வெண்ணி பகுதியிலும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மழையால் முளைத்துப்போன நெல்லை சாலையில் கொட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story