‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை எதிரொலி: மீனவர்களுக்கு உதவ 3 கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு


‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை எதிரொலி: மீனவர்களுக்கு உதவ 3 கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
x
தினத்தந்தி 5 Oct 2018 10:45 PM GMT (Updated: 5 Oct 2018 9:37 PM GMT)

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு உதவும் வகையில் 3 கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.

கடலூர் முதுநகர்,

தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் வானிலை எச்சரிக்கை தொடர்பாக மீனவர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் விதமாக, கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் முதுநகரில் கட்டுப்பாட்டு அறையை மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் தெடங்கி வைத்தார்.

கடலூர் முதுநகர் கட்டுப்பாட்டு அறையை 04142–238170 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு மீனவர்கள் தகவல்களை பெறலாம். இதில் வானிலை மைய அறிவிப்புகள், கடலுக்குள் யாரேனும் மீனவர்கள் சென்றிருந்தால் அவர்களுக்கு உடனுக்குடன் தொழில்நுட்ப உதவியுடன் தகவல் தெரிவிப்பது, அவர்களது நிலை குறித்து அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் மீன்துறை ஆய்வாளர் அண்ணாதுரை, மீன்வள மேற்பார்வையாளர் அறிவேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அன்னங்கோவில், முடசல்ஓடையிலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதில் மீன்துறை சார் ஆய்வாளர் இளங்கோ, மீன்வள மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். இவர்களை 93848–24508 மற்றும் 63829–86212 என்கிற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம்.


Next Story