30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ரேஷன் கடை பணியாளர்கள் 15–ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம்
30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் 15–ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று விழுப்புரம் மண்டல மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மண்டல மாநாடு நேற்று காலை விழுப்புரத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத், இணை செயலாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் தன்ராஜ்பெருமாள் அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத்தலைவர் துரை.சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில், ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம், அரசு பணியாளர்களுக்கு வழங்குவதைப்போல் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும், பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறை அமைக்க வேண்டும், ரேஷன் கடைகளுக்கு கழிவறையுடன் சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 15–ந் தேதி அனைத்து ரேஷன் கடை பணியாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் ராஜி நன்றி கூறினார்.