பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2018 3:42 AM IST (Updated: 6 Oct 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கரூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

கரூர் மாவட்ட பா.ம.க. சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கண்ணன் (மேற்கு), முருகன் (கிழக்கு), மாவட்ட அமைப்பு செயலாளர் ராக்கி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த சில மாதங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை பலமுறை உயர்த்தியதால் ஏழை- எளிய மக்கள் மற்றும் மோட்டார் வாகன தொழிலில் ஈடுபடுவோர் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அதன் விலை உயர்வினை திரும்பப்பெற்று கொண்டு பழையபடி குறைந்த விலைக்கு பெட்ரோல்- டீசலை விற்பனை செய்ய வேண்டும். தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்- டீசல் விலையை நிர்ணயம் செய்வதற்கான உரிமையை வழங்க கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேலும் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு லாரி, வேன், ஆட்டோ, கார் உள்ளிட்ட கனரக வாகனங்களின் வாடகையும் உயர வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக விவசாய விளை பொருட்கள் மற்றும் ஜவுளி, கொசுவலை உள்பட உற்பத்தி பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக எடுத்து செல்வதில் வாகன வாடகைக்கே ஒரு தொகை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவற்றில் விலையேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் 40 முறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் முழுபொறுப்பேற்று கொண்டு உரிய தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது பா.ம.க. நிர்வாகிகள் பேசினர். இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தின் போது, மக்கள் விரோத போக்கினை கடைபிடிக்கும் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அய்யம்பாபு, மாநில துணை தலைவர் குணசேகரன், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் ஞானசேகரன், நகர செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story