திண்டிவனம் பகுதியை கலக்கிய மோட்டார் சைக்கிள் திருடன் கைது


திண்டிவனம் பகுதியை கலக்கிய மோட்டார் சைக்கிள் திருடன் கைது
x
தினத்தந்தி 6 Oct 2018 10:45 PM GMT (Updated: 6 Oct 2018 8:26 PM GMT)

திண்டிவனம் பகுதியை கலக்கிய மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்தனர்.

மயிலம்,

திண்டிவனம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகளவில் நடந்து வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டிவனம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையில் திண்டிவனம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜன், செல்வி எழிலரசி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பெரும்பாக்கம் சோதனை சாவடியில் தனிப்படை போலீசார் மதுவிலக்கு மற்றும் குற்ற வழக்கு தொடர்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மயிலத்தில் இருந்து திருவக்கரை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வரை போலீசார் நிறுத்தினர்.

இதை பார்த்ததும், மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அதை ஓட்டிவந்தவர் தப்பி ஓடி னார். இதையடுத்து போலீசார் துரத்தி சென்று அந்த நபரை மடக்கி பிடித்து மயிலம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

அதில் அவர் சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையம் முருகன் மலை அடிவாரம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் சின்னதுரை(வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடி வந்தது என்றும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் திண்டிவனம் பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சின்னத்துரையை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 20 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

திண்டிவனம் பகுதியை கலக்கி வந்த மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் திருடனை பிடிக்க செயல்பட்ட தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.


Next Story