என்ஜினில் கோளாறு: ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது


என்ஜினில் கோளாறு: ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது
x
தினத்தந்தி 7 Oct 2018 4:00 AM IST (Updated: 7 Oct 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

குன்னூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பல் சக்கர தண்டவாளம் என்பதால் நீராவி என்ஜின் மூலம் 4 பெட்டிகளுடன் மலைரெயில் இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 5 பெட்டிகளுடன் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 210 பயணிகளுடன் காலை 7.15 மணிக்கு மலைரெயில் புறப்பட்டது. ஹில்குரோவ் ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் நடுவழியில் மலைரெயில் நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

பின்னர் குன்னூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடுவழியில் நின்ற மலைரெயிலில் இருந்து சுற்றுலா பயணிகளை மீட்டு குன்னூருக்கு கொண்டு வர 4 பெட்டிகளுடன் மீட்பு ரெயில் காலை 11 மணிக்கு தயாரானது. ஆனால் மழை பெய்ததால் ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பாறை விழுந்தது. உடனே அங்கு சென்ற ரெயில்வே ஊழியர்கள் பாறையை அகற்றினர். பின்னர் குன்னூரில் இருந்து 12 மணிக்கு மீட்பு ரெயில் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் குன்னூருக்கு வந்து சேர்ந்தது. இதற்கிடையே மலைரெயில் என்ஜினில் கோளாறு சரி செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தாமதமாக குன்னூர் ரெயில் நிலையத்துக்கு மலைரெயில் வந்தது. இந்த சம்பவத்தால் குன்னூர்– மேட்டுப்பாளையம் இடையே மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.


Next Story