பள்ளியில் பங்கு தொகையை கேட்டதால் விவசாயிக்கு கொலை மிரட்டல்; 18 பேர் மீது வழக்குப்பதிவு
பள்ளியில் பங்கு தொகையை கேட்டதால் விவசாயிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பள்ளியின் பங்குதாரர்கள் உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குன்னத்தூர்,
குன்னத்தூர் அருகே பூலாங்குளத்தில் வெற்றி விநாயகா மெட்ரிக்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 17 பங்குதாரர்கள் உள்ளனர். இதில் கணபதிபாளையத்தை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன்(54) என்பவரும் பங்குதாரர் ஆவார்.
இந்த பள்ளியின் பங்குதாரர்களின் பட்டியலில் இருந்து பாலகிருஷ்ணனை நீக்க மற்ற பங்குதாரர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது, தனக்கு வரவேண்டிய சுமார் ரூ.53½ லட்சத்தை கொடுத்தால் தானே விலகிக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் அந்த பள்ளியின் பங்குதாரர்கள் ராஜேந்திரன், துரைசாமி மற்றும் 16 பேர் பாலகிருஷ்ணனை தனியாக அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் பாலகிருஷ்ணனை தகாதவார்த்தைகளால் திட்டியதுடன், அரிவாள் மற்றும் ஆயுதங்களை காட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ராஜேந்திரன், துரைசாமி உள்பட 18 பேர் மீது குன்னத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.