ஊத்துக்குளி அருகே தொழிலதிபரின் மகனை கொன்ற நண்பர் கைது


ஊத்துக்குளி அருகே தொழிலதிபரின் மகனை கொன்ற நண்பர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2018 4:45 AM IST (Updated: 7 Oct 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே தொழிலதிபரின் மகனை கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டார். பணத்திற்கு ஆசைப்பட்டு தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஊத்துக்குளி,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் மானூர் பகுதியை சேர்ந்தவர் திருமலைசாமி(வயது 50). இவருடைய மனைவி செல்வி(45). இவர்களுடைய மகன் ஆனந்த்(25). பட்டதாரி. திருமலைசாமி படியூர் அருகே மாரநாயக்கனூர் குன்னம்பாளையத்தில் எண்ணெய் ஆலை வைத்து நடத்தி வருகிறார். இந்த ஆலையை தந்தையுடன் சேர்ந்து ஆனந்த் கவனித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு எண்ணெய் ஆலைக்கு சென்ற ஆனந்த் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்ட போது அது சுவிட்ச்–ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த திருமலைசாமி எண்ணெய் ஆலைக்கு சென்று அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தார். அப்போது ஆனந்த்தை 3 பேர் சேர்ந்து தாக்கி ஒரு வேனில் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருமலைசாமி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் மானூர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ள பாலகுரு(36) என்பவர் 2 பேருடன் சேர்ந்து ஆனந்த்தை தாக்கி கடத்திச்சென்றது தெரியவந்தது. பின்னர் பாலகுரு வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு சாக்கு மூடையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆனந்த் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு பாலகுரு உள்ளிட்ட 3 பேரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று காலை படியூர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தினர். அதில் இருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் பாலகுரு என்பதும், அவர் வந்த வேன் ஆனந்த்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசில் பாலகுரு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எண்ணெய் ஆலை அதிபர் திருமலைசாமியின் மகன் ஆனந்த்தும் நானும் நண்பர்களாக பழகி வந்தோம், அடிக்கடி வெளியூர் செல்வோம். அப்போது ஆனந்த்திடம் அதிகளவில் பணம் இருப்பது தெரியவந்தது. எனவே அவரை கடத்தி பணம் பறிக்க முடிவு செய்தேன். இதற்காக மானூர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் எனது நண்பர்களான ரத்தினசாமி, ராஜாமுகமது ஆகியோருடன் சம்பவத்தன்று எண்ணெய் ஆலைக்கு சென்று ஆனந்த்திடம் பணம் கேட்டு மிரட்டினோம். அவர் கொடுக்க மறுத்தார்.

இதனால் அவரின் கை, கால்களை கட்டி போட்டு கட்டையால் தாக்கினோம். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. எனவே அவரை அங்கிருந்து வேனில் கடத்தினோம். எனது வீட்டுக்கு கொண்டு சென்று பழைய துணிகளை வைத்து தடுத்தும் ரத்தம் நிற்கவில்லை. எனவே பிளாஸ்டிக் கவரால் தலையை மூடினோம். அதற்குள் அதிகளவு ரத்தம் சென்றதால் ஆனந்த் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து நண்பர்கள் ரத்தினசாமி, ராஜாமுகமது ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இந்த நிலையில் காங்கேயத்துக்கு தப்பிச்செல்ல முயன்ற போது போலீசார் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள ரத்தினசாமி, ராஜா முகமது ஆகியோரை தேடிவருகிறார்கள்.


Next Story