ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுவிக்கக்கோரி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு 10 ஆயிரம் தபால் அட்டைகள்; அரசியல் கட்சியினர் அனுப்பி வைத்தனர்


ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுவிக்கக்கோரி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு 10 ஆயிரம் தபால் அட்டைகள்; அரசியல் கட்சியினர் அனுப்பி வைத்தனர்
x
தினத்தந்தி 7 Oct 2018 4:45 AM IST (Updated: 7 Oct 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு 10 ஆயிரம் தபால் அட்டைகளை பல்வேறு அரசியல் கட்சியினர் அனுப்பி வைத்தனர்.

ஈரோடு,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகளான பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு தமிழக கவர்னருக்கு தபால் அட்டைகளை அனுப்பி வைத்தனர்.

தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வரிசையில் நின்று தபால் பெட்டியில் அட்டைகளை போட்டனர்.

இதில் சுமார் 10 ஆயிரம் தபால் அட்டைகள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். முன்னதாக ஈரோடு காந்திஜி ரோட்டில் ஜவான்பவன் கட்டிடத்தின் முன்பு அரசியல் கட்சியினர் திரண்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் கலைந்து தபால் அலுவலகத்திற்கு செல்லுமாறு அவர்களை அறிவுறுத்தினார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story