கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கடமலைக்குண்டு,
கடமலை–மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அருவியில் குளிப்பதற்காக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக, மேகமலை வனப்பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு அங்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாறை, கற்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டன.
இதனையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்களை, வனத்துறையினர் திருப்பி அனுப்பி வருகிறார்கள். மேலும் அருவியில் நீர்வரத்து சீராகும் வரை வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.