தேனியில் கொட்டித்தீர்த்த மழை: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


தேனியில் கொட்டித்தீர்த்த மழை: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2018 3:51 AM IST (Updated: 7 Oct 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் பலத்த மழை கொட்டித்தீர்த்ததால் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனை பார்வையிட சென்ற நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

தேனி பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்தது.

இந்த மழை எதிரொலியாக, பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவில் ராஜவாய்க்கால் கரையோர பகுதிகளில் உள்ள 50–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீரும், சாக்கடை கழிவுநீரும் புகுந்தது. இதனால் இரவில் மக்கள் தூங்க முடியாமல் வீட்டுக்குள் இருந்த தண்ணீரை இரைத்து வெளியே ஊற்றிக் கொண்டு இருந்தனர்.

மழை தொடர்ந்து பெய்ததாலும், தண்ணீர் வடிந்து செல்வதற்கு வழியில்லாததாலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வழிந்தோடாமல் தெருக்களில் தேங்கி இருந்தன.

இந்நிலையில், நேற்று காலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ராஜவாய்க்காலை தூர்வார வலியுறுத்தி தங்களின் ரே‌ஷன் கார்டு, ஆதார் அடையாள அட்டையை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து அங்கு நகராட்சி சுகாதார அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் அலுவலர்கள் அங்கு பார்வையிட வந்தனர். அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. மண் மேவி தூர்ந்து கிடந்த ராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் கடந்து செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பலத்த மழை காரணமாக தேவாரம் பகுதியில் ஓடும் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தண்ணீர் செல்லும் ஆற்றின் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு இருப்பதாலும், புதர் மண்டிக் கிடந்ததாலும் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அதன்படி தேவாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மூனாண்டிபட்டி, ஜெயநகர், பேச்சியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. தெருக்களில் தண்ணீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் பரிதவித்தனர். தெருவில் தண்ணீர் ஓடியதால் மக்கள் தங்களின் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். மழை ஓய்ந்த பின்னர், ஊருக்குள் புகுந்த வெள்ளம் மெல்ல, மெல்ல வடிந்தது.

போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கனமழை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.


Next Story