கழிவுநீர் செல்லும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்; சிவகாசி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


கழிவுநீர் செல்லும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்; சிவகாசி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2018 4:17 AM IST (Updated: 7 Oct 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் கழிவுநீர் செல்லும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சிவகாசி,

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்தது. இதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் இந்த பணியை கலெக்டர் சிவஞானம் தீவிரப்படுத்தி உள்ளதோடு தினமும் அறிக்கை கேட்டு பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிவகாசியில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக காமராஜர் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.என். அலுவலகம் அருகில் உள்ள கழிவுநீர் ஓடை நிரம்பி மழை தண்ணீர் மற்றும் கழிவுநீர் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தபால் நிலையத்துக்குள் சென்றது. இதேபோல் காளியம்மன் கோவில் அருகில் உள்ள ஓடையில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு இருந்ததால் கழிவுநீர் காளியம்மாள் கோவில் தெருவில் சென்றது. இதனால் அந்த பகுதியில் உள்ள 100–க்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் பாதிப்புக்கு ஆளானார்கள். இதை சுட்டிகாட்டிய பின்னர் நகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியை சரி செய்தனர். இதேபோல் பல இடங்களில் கழிவுநீர் செல்ல போதிய வாருகால் வசதி இல்லாமலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த பிரச்சினை மீண்டும் இருக்க கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகமும், சிவகாசி நகராட்சி நிர்வாகமும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதற்கிடையில் நகராட்சி கமி‌ஷனர் அசோக்குமார் தலைமையில் நகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகள் நேற்று 4 பிரிவுகளாக பிரிந்து சென்று கழிவுநீர் செல்ல தடையாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அதை அகற்றி மழைநீர் மற்றும் கழிவுநீர் எளிதாக கடந்து செல்ல தேவையான நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிவகாசி நகராட்சி என்ஜினீயர் சீனிவாசன் தலைமையில் சென்ற குழுவினர் முஸ்லிம் பள்ளியின் பின்புறம் இருந்த ஆக்கிரமிப்பை கண்டுபிடித்து அதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் உதவி என்ஜினீயர் முத்து, ‌ஷசினா, ஜான்சி ஆகியோர் என்.ஆர்.கே.ஆர்.ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் இனி எதிர்காலத்திலும் இந்த பகுதியில் மழை நீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக என்.ஆர்.கே.ஆர். ரோட்டில் சிறிய அளவில் மழை பெய்தாலே குளம்போல் தண்ணீர் தேங்கி நின்று வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடந்து செல்லவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதிகாரிகளின் நடவடிக்கையால் தற்போது அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகாசி நகராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது. இதை தடுக்க நகராட்சி அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்து அதை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் இனி வரும் காலங்களில் மழை பெய்யும் போது அது வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


Next Story