காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் கலெக்டர் ஆய்வு
காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்த வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்,
1–1–2019–ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம்–2019 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால், கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி கடந்த 1–9–2018 அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.
இதன் பின்னர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,482 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 1,028 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, துரைராமசாமிநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குமாரவலசு சாலை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாராபுரம் சாலை காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் களிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு சென்ற கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய பெறப்படும் படிவங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பெற வேண்டும் எனவும், பெறப்படும் படிவங்களின் பேரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி விசாரணை மேற்கொண்டு உரிய காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், வருகிற 14–ந் தேதி நடைபெற உள்ள சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்தார். இதுபோல் அவினாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கேயம் தாசில்தார் மகேஷ்வரன், நகராட்சி ஆணையாளர்கள் தேவிகா (காங்கேயம்), சங்கர் (வெள்ளகோவில்), காங்கேயம் நகராட்சி பொறியாளர் சரவணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.