சிவப்பு நிற ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்


சிவப்பு நிற ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:15 AM IST (Updated: 8 Oct 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

சிவப்பு நிற ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

 பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உலகம் முழுக்க கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களில் ரூ.2½ லட்சம் கோடிக்கு மேல் கடன் வைக்கப்பட்டு இருந்தது. இதனை அடைத்ததாலும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்ததாலும் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. இந்த நிலையில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைத்துள்ளார். மேலும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் அந்த மாநில அரசுகள் லிட்டருக்கு ரூ.2.50 குறைத்துள்ளன. இதனால் நாட்டில் 15–க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்துள்ளது.

ஆனால் புதுவையில் மத்திய அரசின் வரி குறைப்பை கூட அமல் செய்யாமல் இருந்தனர். இது குறித்து நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்ததன்பேரில் கலால்துறை தற்போது விலையை குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி முதல்–அமைச்சர் நாராயணசாமி பந்த் போராட்டம் நடத்தினார். தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைத்தவுடன் 5 மாநில தேர்தலை முன்னிட்டு நாடகம் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டுகின்றார். நாடகம் நடத்த வேண்டிய அவசியம் பா.ஜ.க.விற்கு இல்லை.

கல்வித்துறையின் அறிவிப்புகள் கேலிக்கூத்தாக உள்ளது. காலை 8 மணிக்கு பள்ளிகள் இயங்கும் என்கின்றனர். 8.30 மணிக்கு விடுமுறை என்கின்றனர். இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று பாதி வழியில் திரும்பும் அவல நிலை ஏற்பட்டது. ஒருநாள் முதல்–அமைச்சர் விடுமுறை அறிவிக்கின்றார், மற்றொரு நாள் கல்வித்துறை அமைச்சர் விடுமுறை அறிவிக்கின்றார். அதற்கு அடுத்த நாள் கல்வித்துறை இயக்குனர் அறிவிக்கின்றார். எனவே மழையை முன்னிட்டு பள்ளிகளுக்கான விடுமுறையை உரிய நேரத்தில் அறிவிக்க வேண்டும்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கிராமப்புற பகுதிகளில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே சேதமான பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கன மழையால் ஒரு வாரமாக கட்டுமானத் தொழிலில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். கடந்த 6 மாத காலமாக இலவச அரிசியும் வழங்கப்படவில்லை. எனவே சிவப்பு நிற ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் இலவச அரிசியை வழங்க வேண்டும். பொதுப்பணித்துறையும், உள்ளாட்சித்துறையும் மழைக்கான திட்டமிடல் ஏதும் செய்யவில்லை. மழையை எதிர்கொள்ள சரியாக திட்டமிட வேண்டும்.

மக்கள் நல திட்டங்களை முடக்கிய மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 4½ ஆண்டுகளில் வெளிநாடுகளில் கடன் வாங்கியதே இல்லை. கடன் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளோம். முதல்–அமைச்சர் நாராயணசாமியின் நெல்லித்தோப்பு தொகுதியிலேயே மழை நிவாரணப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. அனைத்து தொகுதிகளிலும் நிவாரண பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவும், ஜிப்மரில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கவும் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். அதற்காக வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story