விழுப்புரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி


விழுப்புரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 Oct 2018 10:45 PM GMT (Updated: 7 Oct 2018 9:16 PM GMT)

விழுப்புரம் அருகே கிணற்றில் இறங்கி மின் மோட்டாரை சரி செய்தபோது விஷ வாயு தாக்கி 2 பேர் பலியானார்கள்.

விழுப்புரம்,

கிணற்றில் இறங்கி மின் மோட்டாரை சரி செய்தபோது விஷ வாயு தாக்கி 2 பேர் பலியான இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விழுப்புரம் அருகே உள்ள ஆலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராமன்(வயது 53), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு கிணறு உள்ளது. 46 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் அந்த கிணற்றில் ராஜாராமன் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் திடீரென பழுதானது. இதையடுத்து ராஜாராமன் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்ய முடிவு செய்தார்.அதன்படி நேற்று காலை ராஜாராமன் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த பன்னீர்(35) என்பவருடன் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்வதற்காக கிணற்றின் மேல்பகுதியில் கயிறு கட்டி அதன் மூலம் கிணற்றின் உள்ள இறங்கினார்.

பின்னர் அவர்கள் இருவரும் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜாராமனும், பன்னீரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தனர். இதற்கிடையே மின்மோட்டாரை சீரமைக்க கிணற்றுக்கு சென்ற ராஜாராமன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றின் உள்ளே 2 பேரும் மயங்கி கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றில் மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜாராமன் மற்றும் பன்னீரை பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில், கிணற்றின் உள்ளே இறங்கி மின்மோட்டாரை சரிசெய்து கொண்டிருந்த போது 2 பேரும் விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story