பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கக்கோரி குதிரையில் வந்து மனு
பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரியை குறைக்கக்கோரி குதிரையில் வந்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் வீட்டு மனைப்பட்டா, தெருவிளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்து மக்கள் பரிஷத் நிறுவன தலைவர் மணிகண்டன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி குதிரையில் மனு அளிக்க வந்தார். அப்போது அந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் குதிரையில் செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதன்பின்னர் குதிரையை விட்டு இறங்கி கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.2.50 என்ற அளவுக்கு குறைத்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் மதிப்புக்கூட்டு வரியை குறைத்தன. இதனை பின்பற்றி தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் மற்றும் இளைஞர் நல சங்கத்தினர் கோரிக்கை மனுக்களை மாலை போல் அணிந்து வந்தனர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில், அன்னை இந்திரா நகர்–மீனாட்சியம்மன் நகர் இடையே சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கழிவு நீர் தேங்குவதால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை மூடி விட்டு, இந்த பகுதியில் சேகரமாகும் கழிவு நீரை சங்கனூர் ஓடைக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி, துணை தலைவர் சக்திவேல் மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில், காரமடை ஒன்றியம் சின்னகள்ளிப்பட்டி அருகே உள்ள ரங்கபாளையம் கிராமத்தில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இங்கு மதுக்கடை அமைக்கப்பட்டால், மது அருந்தும் நபர்கள் விவசாய நிலங்களில் காலி மது பாட்டில்களை உடைத்து போட்டு விடும் அபாயம் உள்ளது. இதனால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதுடன், இங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கும் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் கால்நடைகளுக்கும் காலில் காயங்கள் ஏற்படும். எனவே இங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் தலைவர் கோபால், ம.தி.மு.க. பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி, பயனியர் தியாகு உள்ளிட்டோர் அளித்த மனுவில், விளாங்குறிச்சி சாலை, எல்லைத்தோட்ட சாலை ஆகிய சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பீளமேடு ரெயில்வே மேம்பாலத்தில் சுரங்கபாதை அமைக்க வேண்டும் என்று இருந்தது.
கோவை மாநகராட்சி 95–வது வார்டுக்குட்பட்ட மதினா மற்றும் சங்கமம் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், சங்கமம் நகர், மதினா நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. இந்த பகுதியில் மழைநீர் வெளியேறும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் குடோன்கள் கட்டியுள்ளனர். இதனால் மழைக்காலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. எனவே இங்கு ஆக்கமிரப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.