டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
டீசல்விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ராமநாதபுரத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்,
ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு சேதமடைந்த விசைப்படகுகளுக்கு அரசு சார்பில் தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும், இலங்கையில் வைக்கப்பட்டுள்ள 187 படகுகளை விடுவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மீனவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீனவர் சங்க தலைவர் போஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சேசுராஜா, எமரிட், சகாயம், இருதயம், ராயப்பன், சம்சன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துவரும் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், எல்லை தாண்டி வருவதாக குற்றம்சாட்டி படகுகளை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதுடன், படகினை அரசுடைமையாக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.
மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுஉள்ள படகுகளை மீட்டுக்கொண்டுவர வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.