முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் எளிய வாழ்க்கையை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் ஓசூரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு


முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் எளிய வாழ்க்கையை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் ஓசூரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
x
தினத்தந்தி 9 Oct 2018 4:15 AM IST (Updated: 9 Oct 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் எளிய வாழ்க்கையை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என ஓசூரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

ஓசூர்,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், உலக விண்வெளி வாரம் 2018-ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் செயற்கைக்கோள் கண்காட்சி நடைபெற்றது. இதன் நிறைவு விழா, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பாண்டியன் தலைமை தாங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கலெக்டர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப்பொது மேலாளர், விஞ்ஞானி முனிரத்தினம் வரவேற்று பேசினார். திட்ட இயக்குனர் வெங்கட்ராமன், ஓசூர் அதியமான் கல்லூரி முதல்வர் ரங்கநாத் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4-ந் தேதி முதல் 10-ந்தேதிக்குள், உலக விண்வெளி வாரத்தை கொண்டாடி வருகிறது.

இந்த மையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு, செயற்கைக்கோள் ஏவுகணைகளை நிறுவுவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், தகவல் வசதிகள், அறிவியல் சார்ந்த தேவைகளை சிறப்பான முறையில் வழங்கி வருகிறது. வானிலை சம்பந்தப்பட்ட செயற்கைகோள்கள், தகவல் பரிமாற்றத்திற்கான செயற்கைக்கோள்கள், நேவிகேஷன் தொடர்பான செயற்கைக்கோள்கள் என பல்வேறு வகையான செயற்கைக்கோள்கள், தேவைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை சிறப்பான முறையில் வடிவமைத்து, அதன் தொடர்பான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய பணியாகும்.

மாணவர்களே, நீங்கள் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, முன்மாதிரியாக கொண்டு எளிய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். அவர் தனது பதவிக்காலம் முடிந்து ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறும்போது, 2 பெட்டிகளை மட்டுமே கொண்டு சென்றார். ஒரு பெட்டி நிறைய புத்தகங்களும், மற்றொரு பெட்டியில் அவரது உடைகள் மட்டுமே இருந்தன. அந்த எளிய வாழ்க்கையை நீங்களும் பின்பற்றி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு விழாவில், கவர்னர் பேசினார்.

முன்னதாக, கவர்னர் தனது பேச்சை தொடங்கும்போது, வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கீங்க?, நல்லா இருக்கீங்களா?, நல்லது என்று தமிழில் பேசினார்.

இந்த விழாவில், கவர்னரின் முதன்மை செயலாளர் ராஜகோபால் மற்றும் இஸ்ரோ அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அதியமான் கல்லூரி பேராசிரியர்கள், பர்கூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்களும், கல்லூரியின் மாணவ, மாணவிகளும், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Next Story