ரூபாய் நோட்டின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி: நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி விட்டது - புதுவை மாநில காங்கிரஸ் குற்றச்சாட்டு


ரூபாய் நோட்டின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி: நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி விட்டது - புதுவை மாநில காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Oct 2018 11:30 PM GMT (Updated: 2018-10-09T01:48:51+05:30)

ரூபாய் நோட்டின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி விட்டது என புதுவை மாநில செயற்குழுவில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அவசர செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய பிரசார குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி, டெல்லி மேலிட சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்ட துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு அரசியல் சுயலாபத்திற்காக ஒட்டுமொத்த நாட்டை பாழ்படுத்தி கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை வீதி வீதியாக சென்று மக்களிடம் பிரசாரம் செய்வது.

காங்கிரஸ் வளர்ச்சிக்காக பாடுபடும் நிர்வாகிகளுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மேலும் ஒரு பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரை நியமனம் செய்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அனுமதிக்க வேண்டும்.

4 மாவட்டங்களாக செயல்பட்டு வந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி 6 மாவட்டங்களாக செயல்பட அனுமதி வழங்குமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை கேட்டுக்கொள்வது.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வரும் பாரதீய ஜனதா அரசை வன்மையாக கண்டிக்கிறோம். உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை வெகுவாக குறைக்கவேண்டும்.

மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு சுயலாபத்திற்காக ரபேல் போர் விமானங்களை அதிக விலைக்கு வாங்கி ரூ.41 ஆயிரம் கோடி ஊழல் செய்தது. புதிய ஒப்பந்தத்தின் உண்மை தன்மையினை நாட்டு மக்கள் அறியும் வண்ணம் பாராளுமன்ற நிலைக்குழுவின் விசாரணைக்கு மோடி தயாராக வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சர்வதேச அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருகிறது. தொடர்ந்து ரூபாயின் மதிப்பு விழ்ச்சி அடைவதால் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சர்வாதிகாரமாக சட்டங்கள் பல இயற்றி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை சீர்குலைத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக மாறிவிட்டது. கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story