திருப்பூர், பெருமாநல்லூர், சேவூரில் கொட்டி தீர்த்த மழை: வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்
திருப்பூர், பெருமாநல்லூர் மற்றும் சேவூர் பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கயிறு மூலம் மீட்கப்பட்டனர்.
பெருமாநல்லூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையால் திருப்பூர் 19–வது வார்டு மும்மூர்த்திநகர், கருப்பராயன் பகுதிகளில் உள்ள 150–க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேவரமுடியவில்லை. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று வீடுகளுக்குள் தத்தளித்து பொதுமக்களை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர். பின்னர்அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.அவர்களை விஜயகுமார் எம்.எல்.ஏ., சப்–கலெக்டர் ஷ்ரவன் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜெயக்குமார், திருப்பூர் வடக்கு தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் சென்று ஆறுதல் கூறினர். அதே போல் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தை சுற்றி மழை நீர் நின்றதால் அவர்களையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
அதே போல் நெருப்பெரிச்சல் பகுதியில் 150 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த கோவிலையும் மழை நீர் சூழ்ந்தது. போயம்பாளையம் ஏ.டி.காலனியில் 100 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. 3–வது வார்டு ஒட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த சலீம் என்பவரது வீட்டின் ஓடுகள் கீழே விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இந்த பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பெருமாநல்லூரில் நேற்று மாலை 3.15 மணிக்கு தொடங்கிய கனமழை 5.15 வரை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் அனைத்து நீர்வழித் தடங்களிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. பாரதியார் நகர் பகுதியில் 60–க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. அந்த வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாரதியார்நகர் பகுதிக்கு சென்று கயிறு கட்டி சிலரை மீட்டனர். மற்றவர்களை பெருமாநல்லூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான டிராக்டர் மற்றும் திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஜீப் மூலம் மீட்டு அங்கிருந்து வெளியே கொண்டு வந்தனர். மேலும் வீடுகளில் யாராவது இருந்தால் உடனே வெளியே வருமாறும் ஒலி பெருக்கி மூலம் போலீசார் அறிவித்தனர். இதையடுத்து வீடுகளில் இருந்த ஒரு சிலர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர்அந்த பகுதிகளுக்குள் யாரும் செல்லாதவாறு கயிறு கட்டப்பட்டுள்ளது.
மேலும் பெருமாநல்லூர் சி.எஸ்.ஐ காலனி அருகில் உள்ள நீர் வழித்தடத்தில் உள்ள வீடுகளிகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. பெருமாநல்லூர்–கணக்கம்பாளையம் செல்லும் ரோட்டில் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே உள்ள குளம் நிரம்பி உடைந்ததால் பல மணி நேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈட்டிவீரம்பாளையம் முட்டியங்கிணறு ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் சுமார் 40 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு குடியிருந்தவர்கள் அலறியபடி வெளியே ஓடிவந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.
பொங்கு பாளையம் பகுதியில் இடம் விற்பனை செய்வதற்கு மாடலாக கட்டி விற்பனை செய்யப்பட்ட ஒரு தனியார் ரியல் எஸ்டேட்–க்கு சொந்தமான இடம் பள்ளமாக இருந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அந்த வீட்டில் குடியிருந்த பெண் தனது குழந்தையை தூக்கி கொண்டு அலறி கூக்குரல் போட்டபடியே பாதுகாப்பான இடத்திற்கு ஓடினார். இதையடுத்து போலீசாரும், அவினாசி தீயணைப்பு துறையினரும் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். கணக்கம்பாளையம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக கணக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் குளமாக மாறியது. இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பாதிக்கப்பட்ட மக்கள் முட்டியங்கிணறில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திலும், ஈட்டி வீரம் பாளையம் அரசு தொடக்க பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்ன ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரிகரன், செல்வராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
சேவூர் பகுதியில் பெய்த கனமழையால் சிந்தாமணிபாளையம், புதிய ஆதிதிராவிடர் காலனி மற்றும் வலையபாளையம் பகுதிகளில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. சேவூர்–கோபி சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த சாலையில் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேவூர் ஊராட்சி ராக்கம்பாளையத்தில் உள்ள தரைமட்ட பாலத்தில் மழை வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கும் மழை நீர் புகுந்தது. முறியாண்டம்பாளையம் ஊராட்சி மூலக்குரும்பபாளையம், அசநல்லிப்பாளையம் சாலைகளில் உள்ள தரை மட்ட பாலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊருக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கியது. சிந்தாமணிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் விரைந்து சென்று, அவர்களை மீட்டு அருகில்உள்ள பள்ளியில் தங்க வைத்தனர். மேலும் சேவூர் வாரச்சந்தையும் சேறும், சகதியுமாக மாறியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.