குன்றி வனப்பகுதியில் வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானை


குன்றி வனப்பகுதியில் வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானை
x
தினத்தந்தி 10 Oct 2018 4:00 AM IST (Updated: 9 Oct 2018 7:24 PM IST)
t-max-icont-min-icon

குன்றி வனப்பகுதியில் வாகன ஓட்டிகளை ஒற்றை யானை துரத்தியது.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, தலமலை, டி.என்.பாளையம், கேர்மாளம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, மான், சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்தநிலையில் டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட குன்றி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. தற்போது ஒற்றை யானை ஒன்று அடிக்கடி வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் உலா வருகிறது. இந்த யானை சாலையோரங்களில் உள்ள மூங்கில் கிளைகளை முறித்து தின்கிறது. இந்த யானை குன்றி அஞ்சனை பிரிவு சாலையோரத்தில் நேற்று முன்தினம் உலா வந்தது. அப்போது அந்த வழியாக 2 சக்கர வாகனங்களில் வந்தவர்களை ஒற்றை யானை துரத்தியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடினார்கள். பின்னர் அந்த யானை சிறிது நேரம் சாலையில் உலா வந்தது. இந்த யானையை கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், குன்றி வனப்பகுதியில் உள்ள சாலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக யானை ஒன்று சுற்றித்திரிகின்றது.

இந்த யானை புதர்மறைவில் நின்று உள்ளதால் தெரிவதில்லை. மேலும், அந்த யானை வாகனங்களில் வருபவர்களை அடிக்கடி துரத்துகிறது. இதேபோல் 2 சக்கர வாகனங்களில் குன்றி வழியாக அச்சத்துடனே செல்ல வேண்டி உள்ளது. எனவே சாலையோரத்தில் உலா வரும் ஒற்றை யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story