கொள்ளிடம் ஆற்றில் படகுகள் மூலம் மணல் அள்ளிய வாலிபர் கைது 3 படகுகள் பறிமுதல்


கொள்ளிடம் ஆற்றில் படகுகள் மூலம் மணல் அள்ளிய வாலிபர் கைது 3 படகுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Oct 2018 11:00 PM GMT (Updated: 9 Oct 2018 7:01 PM GMT)

கொள்ளிடம் ஆற்றில் படகுகள் மூலம் மணல் அள்ளிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் மணல் எடுக்க பயன்படுத்திய 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி படகுகள் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் சிலர், மணல் திட்டில் இருந்து அனுமதியின்றி மணலை அள்ளி படகு மூலம் கரைக்கு கொண்டு சென்று பின்னர் அந்த மணலை டிராக்டர் களில் நிரப்பி வெளியூர்களுக்கு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உடனே போலீசார் அவர்களை பிடிக்க விரட்டினர். அப்போது ஒரு வாலிபர் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், நாதல்படுகை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் சரத்குமார்(வயது 22) என்று தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர்.

மேலும் மணல் அள்ள பயன்படுத்திய 3 நாட்டு படகுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story