பள்ளிவாசல் தலைவரை தாக்கிய வழக்கில் தேடப்பட்ட 2 பேர் கைது
அரியாங்குப்பம் அருகே பள்ளி வாசல் தலைவரை வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
அரியாங்குப்பம்,
அரியாங்குப்பம் அருகே மாஞ்சாலை இந்திரா நகரில் பள்ளி வாசல் தலைவர் முனுவர்கான். கடந்த ஆகஸ்டு மாதம் பள்ளி வாசலுக்கு புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் முனுவர்கான் தொடர்ந்து தலைவர் பதவியில் நீடித்து வந்தார். இதற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி வாசல் தலைவர் முனுவர்கானுக்கும், புதிய நிர்வாகிகளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது முனுவர்கானுக்கு ஆதரவாக செயல்பட்ட அவருடைய தங்கை மகன் கவுஸ் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசில் முனுவர்கான் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் முனுவர்கான் மற்றும் அவருடைய நண்பர்கள் நோணாங்குப்பம் படகு குழாம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று வந்து முனுவர்கானை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உதவி சப்–இன்ஸ்பெக்டர் அன்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சண்முகம் நகரை சேர்ந்த ஜமில் (29) என்பவரை கைது செய்தனர். மற்றவர்களை தொடர்ந்து தேடிவந்தனர்.
இந்தநிலையில் தேடப்பட்டவர்களில் 2 பேர் மாஞ்சாலை காளியம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மாஞ்சாலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 22), மணவெளி தீர்த்தக்குளம் வீதியை சேர்ந்த சேது (22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் போலீசார் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடிவருகின்றனர்.