லாரி அதிபரின் வீட்டை இடிக்காமல் 5 அடி உயர்த்தும் பணி தீவிரம் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்


லாரி அதிபரின் வீட்டை இடிக்காமல் 5 அடி உயர்த்தும் பணி தீவிரம் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 10 Oct 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் லாரி அதிபரின் வீட்டை இடிக்காமல் 5 அடி உயர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல்-திருச்செங்கோடு சாலை கொங்குநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 50). லாரி அதிபர். இவர் கடந்த 1985-ம் ஆண்டு அங்கு வீடு கட்டினார். அதன்பின்னர் நகராட்சி சார்பில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது சாலை சுமார் 5 அடி வரை உயர்த்தப்பட்டதால், இவரது வீடு உள்ள பகுதி பள்ளமானது.

இதனால் மழை காலங்களில் தண்ணீர் வீட்டிற்குள் புகுந்து மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டை இடிக்காமல், வாகனங்களுக்கு டயர் மாற்ற பயன்படுத்தப்படும் ஜாக்கிகளை பயன்படுத்தி, தேவையான உயரத்திற்கு தூக்கி வைக்கும் நவீன தொழில்நுட்பம் குறித்து கேள்விபட்ட அவர், இதற்காக அரியானா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை அணுகினார்.

இதைத்தொடர்ந்து அரியானா மாநிலத்தை சேர்ந்த 12 தொழிலாளர்கள் வீட்டின் உயரத்தை அதிகப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர்.

இது குறித்து வீட்டின் உரிமையாளர் வீரமணி கூறியதாவது:-

எனது வீடு 1,300 சதுர அடியில் கட்டப்பட்டதாகும். தற்போது இதுபோன்ற வீட்டை புதிதாக கட்டுவதற்கு சுமார் ரூ.40 லட்சம் வரை செலவாகும். ஆனால் இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சுமார் ரூ.10 லட்சம் செலவில் வீட்டின் உயரத்தை 5 அடி அதிகப்படுத்தி வருகிறேன். இப்பணி முழுமையாக முடிவடைந்த பிறகு 2 மாடிகள் கூட கட்டிக்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வீட்டை பெயர்த்து, 300 ஜாக்கிகள் மூலம் தூக்கி வைத்து உள்ளனர். இப்பணிகள் இன்னும் 15 நாட்களில் முடிவடையும் என தெரிவித்தனர்.

சுமார் 40 டன் எடை கொண்ட வீட்டை ஜாக்கிகள் மூலம் தூக்கி, 5 அடிக்கு உயர்த்தும் இப்பணியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சென்னை போன்ற பெரிய நகரங்களில் இதுபோன்ற பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தாலும், நாமக்கல்லில் இதுபோன்ற தொழில்நுட்பத்தில் வீட்டின் உயரத்தை அதிகப்படுத்தும் பணி முதல் முறையாக இங்கு தான் நடைபெறுகிறது என தொழிலாளர்கள் கூறினர்.

Next Story