மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் கலெக்டரிடம், அரசியல் கட்சியினர் மனு
மாணவர்களின் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப், மாநகர செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் ராஜகுரு, ம.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் உள்பட பலர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
வருகை பதிவு குறைவான மாணவர்களுக்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். மேலும் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தடியடிக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story