மணல் குவாரிகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கோரி கலெக்டரிடம் மனு
கரூர் மாவட்ட காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டர் சந்தித்து மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட கலெக்டர் அன்பழகனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், கரூர் மாவட்டம் குளித்தலை, மணத்தட்டை உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் காவிரி ஆற்றில் அள்ளப்பட்டு வெளியிடங்களுக்கு பல்வேறு லாரிகளில் அதனை கொண்டு செல்கின்றனர். இது பற்றி அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டு, மணல் கொண்டு செல்ல உரிய அனுமதி பெறாத லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையெனில் கரூர் காவிரித்தாயை மீட்டெடுக்க போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். அப்போது காவிரி ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட மணல் ஆய்வு அறிக்கை, இயற்கை வளம் சுரண்டப்பட்டதன் விவரம் உள்ளிட்ட ஆவணங்களை அவர்கள் கலெக்டர் காண்பித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பதில் கூறினார்.