திருவள்ளூர் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, பணம் கொள்ளை


திருவள்ளூர் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 11 Oct 2018 4:15 AM IST (Updated: 11 Oct 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகள், ரூ.78 ஆயிரம், ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 10 அரிசி மூட்டைகள், மளிகை பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூங்கா நகர், தேவா நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார்(வயது 54). இவருடைய மனைவி ஜான்சிராணி(48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கிருஷ்ணகுமார், அதே பகுதி டீச்சர்ஸ் காலனி முதல் தெருவில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகுமாரின் பக்கத்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 10 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

இதனால் பயந்துபோன கிருஷ்ணகுமார், தனது வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.78 ஆயிரம் மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்களை பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் தனது மளிகை கடையில் வைத்து இருந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் கிருஷ்ணகுமார், மளிகை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க ‌ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, மளிகை பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

கடையில் வைத்து இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.78 ஆயிரம், ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் மளிகை கடையில் இருந்த 10 அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களையும் மர்மநபர்கள் தூக்கிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி கிருஷ்ணகுமார் அளித்த புகாரின்பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கிருஷ்ணகுமார், தனது வீட்டில் உள்ள தங்க நகைகள், பணத்தை மளிகை கடையில் வைத்து இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தங்கள் கைவரிசையை காட்டி இருப்பது தெரியவந்தது.

எனவே கிருஷ்ணகுமாருக்கு நன்கு தெரிந்த நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

மேலும் இதுபற்றி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, சுகந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மளிகை கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story