ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 மாணவர்களை இடைநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில், ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 6 பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் இங்கு முதுநிலை பட்டப்படிப்புகளில் படித்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் இயக்குனர் பதவி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது. மேலும் பட்டப்படிப்பு நடத்துவதற்கு எந்தவித பல்கலைக்கழக விதிமுறைகளையும், பாடப்பிரிவுகளையும் பின்பற்றப்படுவது இல்லை. போதிய பேராசிரியர்களும் இங்கு இல்லை. மத்திய அரசின் நிறுவனம் என்ற பெயரில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ராஜீவ்காந்தி உருவம் பொறித்த கல்வி நிறுவனத்தின் முத்திரையை மாற்ற முயற்சி நடக்கிறது.
உரிய மதிப்பெண் சான்றிதழ்கள், அடையாள அட்டையை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை பலமுறை மத்திய அரசுக்கும், அமைச்சகத்துக்கும் மாணவர்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இவற்றை கண்டித்து ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாடு நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவ–மாணவிகள் கல்வி நிறுவனத்தின் உள்ளே கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக இயக்குனரை நியமிக்க வேண்டும். மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசையும், கல்வி நிறுவன நிர்வாகத்தையும் வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் 5 பேரை நேற்று நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. கல்வி நிறுவன நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கல்வி மையத்தின் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் போராட்டத்தை ஒடுக்கவே மாணவர்களை இடைநீக்கம் செய்து உள்ளதாகவும், மாணவர்களின் இடைநீக்கத்தை திரும்பப்பெறும் வரையும், நிரந்தர இயக்குனரை நியமிக்கும் வரையிலும் எங்களின் போராட்டம் தொடரும் என மாணவ–மாணவிகள் தெரிவித்தனர்.