திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற கள்ளக்காதலன்
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, பிணத்தை கிணற்றில் வீசிய வாலிபர் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஓதுவார் சந்து பகுதியை சேர்ந்தவர் தெய்வமணி. அவருடைய மகள் மாரீஸ்வரி (வயது 23). இவருக்கும் கோபாலன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஈஸ்வரன்-மாரீஸ்வரி தம்பதிக்கு சத்யா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. சத்யா விற்கு பிறகு பிறந்த சக்திசிவா, மாரிசக்தி ஆகிய குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மாரீஸ்வரிக்கும், ஈஸ்வரனுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஈஸ்வரன் மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மாரீஸ்வரி தனது தாய் வீட்டில் மகள் சத்யாவுடன் இருந்தார்.
இதற்கிடையில் மாரீஸ்வரிக் கும், அவரது உறவினரான திருத்தங்கல் முனீஸ்வரன் நகரை சேர்ந்த ராஜா மகன் மாரிப்பாண்டிக்கும்(22) பழக் கம் ஏற்பட்டது. கல்குவாரியில் வேலை செய்து வந்த மாரிப்பாண்டி அடிக்கடி மாரீஸ்வரியை தனிமையில் சந்தித்து தனது கள்ளக்காதலை வளர்த்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை திருத்தங்கல் ஆறுமுகச்சாமிநாடார் சந்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடி வைத்துள்ளார். அப்போது இளம்பெண் மாரீஸ்வரி தனது மகளை தனது தாய் கருப்பாயி வீட்டில் விட்டுவிட்டு மாரிப்பாண்டியுடன் தனியாக வந்ததாக கூறப்படுகிறது.
திருமணம்
இதற்கிடையில் மாரிப்பாண்டிக்கு விருதுநகரில் உள்ள உறவினர் ஒருவர் உதவியுடன் திருமணம் செய்ய பெண் பார்க்கும் படலம் தொடங்கி உள்ளது. இது குறித்த தகவல் மாரீஸ்வரிக்கு தெரியவந்தவுடன் அவர் செல்போனில் தொடர்பு கொண்டு, “நீ வேறு பெண்ணை திருமணம் செய்யக் கூடாது, என்னைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மாரீஸ்வரியை இரவில் சந்தித்து மாரிப்பாண்டி சமாதானம் செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர், அந்த வீட்டில் கள்ளக் காதலியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டை பூட்டிவிட்டு, உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து ஒரு கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் அருப்புக்கோட்டை கோர்ட்டில் நீதிபதி வஷித்குமார் முன்னிலையில் சரண் அடைந்தார். அப்போது, தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு, அதே பகுதியில் உள்ள கிணற்றில் பிணத்தை போட்டு விட்டதாக கூறி உள்ளார். இது குறித்த தகவல் திருத்தங்கல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் திருத்தங்கல்-எஸ்.என்.புரம் ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் மிதந்த மாரீஸ்வரியின் உடலை மீட்டனர். பின்னர் இது குறித்து மாரீஸ்வரியின் தாய் கருப்பாயி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் விசாரணையில், கொலை செய்யப்பட்ட மாரீஸ்வரி தினமும் 3 முறை தனது தாய் கருப்பாயிடம் போனில் பேசும் பழக்கம் உள்ளவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கருப்பாயியை நேரில் சந்தித்து சந்தோஷமாக இருப்பதாகவும், மாரிப்பாண்டி தன்னை நல்ல முறையில் கவனித்துக்கொள்வதாகவும் கூறி உள்ளார்.
அதன் பின்பு மாரீஸ்வரியிடம் இருந்து போன் வராததால் கருப்பாயி, அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அதை எடுத்து பேசிய மாரிப்பாண்டி, தான் வெளியே இருப்பதாகவும், மாரீஸ்வரி, வீட்டில் இருப்பதாகவும் கூறி உள்ளார். இதை தொடர்ந்து கருப்பாயி, தனது மகளை தேடி ஆறுமுகச்சாமிநாடார் தெருவில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்ததால் மகளை பார்க்காமல் திரும்பி சென்றுள்ளார். மகள் காணாமல் போனது குறித்து எந்த சந்தேகமும் அடையவில்லை. இதற்கிடையில் நேற்று திருத்தங்கல் போலீசார் மாரீஸ்வரி கொலை செய்யப்பட்ட தகவல் கூறிய பின்னர் தான் கருப்பாயி மற்றும் குடும்பத்தினருக்கு மாரீஸ்வரி கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கருப்பாயி திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்த போது, கொலை செய்யப்பட்ட மாரீஸ்வரியின் 3 வயது குழந்தை சத்யா போலீஸ் நிலையத்தில் அப்பாவியாக ஓடி விளையாடியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story