கடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்த அதிகாரிகள் : பேச்சுவார்த்தைக்குப்பின் மீனவர்களிடம் ஒப்படைப்பு
கடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலையை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவ சமுதாயத்தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் சுருக்குமடி வலைகளை மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி, சோனங்குப்பம், ராசாப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
இதில் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை அதிகாரிகள் பல முறை இந்த வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று நோட்டீஸ் வழங்கினர். மேலும் பல முறை எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் சில மீனவர்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி வந்தனர்.
இதையடுத்து இந்த மீனவர்களுக்கு இறுதி எச்சரிக்கையாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும், மீனவர்களின் படகுகளில் நோட்டீசும் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று கடலூர் சப்-கலெக்டர் சரயூ உத்தரவின்பேரில் மீன்வளத்துறை துணை இயக்குனர் ரேணுகா, உதவி இயக்குனர் கங்காதரன், கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கடலோர காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், வன அலுவலர் அப்துல்ஹமீது மற்றும் போலீசார் கடலூர் துறைமுகத்தில் கூட்டாய்வு செய்தனர்.
அப்போது துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை கிடந்தது. அந்த வலையை அதிகாரிகள் பறிமுதல் செய்து, லாரியில் ஏற்றினர். இதை அறிந்த மீனவ கிராம தலைவர்கள் மீன்வளத்துறை துணை இயக்குனர் ரேணுகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களிடமே மீண்டும் அந்த வலைகளை அதிகாரிகள் கொடுத்து விட்டனர்.
இது பற்றி துணை இயக்குனர் ரேணுகா நிருபர்களிடம் கூறுகையில், மீனவ கிராம தலைவர்கள் எங்களிடம் இனி மேல் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த மாட்டோம் என்று கடிதம் கொடுத்துள்ளனர். இதையடுத்து நாங்கள் பறிமுதல் செய்த வலையை அவர்களிடம் வழங்கி விட்டோம். இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் மட்டும் மீனவர்களுக்கு அவகாசம் கொடுத்து உள்ளோம். அதற்குள் அவர்கள் சுருக்குமடி வலைகளை எடுத்து சென்று விட வேண்டும். மீறினால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story