நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார்: நானா படேகரை கைது செய்ய கோரி மகளிர் காங்கிரசார் போராட்டம்


நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார்: நானா படேகரை கைது செய்ய கோரி மகளிர் காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2018 4:45 AM IST (Updated: 12 Oct 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

நடிகை தனுஸ்ரீதத்தா கொடுத்த பாலியல் புகாரில் நடிகர் நானா படேகரை கைது செய்ய கோரி மகளிர் காங்கிரசார் போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினார்கள்.

மும்பை,

நடிகை தனுஸ்ரீதத்தா சமீபத்தில் டி.வி. சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்தார். அப்போது அவர் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த இந்தி படப்பிடிப்பின் போது நடிகர் நானா படேகர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் இதுகுறித்து மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் ஒன்றையும் அளித்து இருந்தார்.

இதேபோல நடிகர் நானா படேகர் தன் மீது அவதூறு பரப்பியதாக நடிகை தனுஸ்ரீதத்தாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்தநிலையில் நடிகை தனுஸ்ரீதத்தா ஒஷிவாரா போலீஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் அளித்தார். அதில் நானா படேகர் சம்பவத்தன்று படப்பிடிப்பின் போது நடனம் சொல்லி தருவது போல தகாத இடங்களில் தொட்டு மானபங்கம் செய்ததாக நடிகை கூறியுள்ளார்.

நடிகையின் புகார் தொடர்பாக நடிகர் நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் அச்சாா்யா, தயாரிப்பாளர் சமீ சித்திக், இயக்குனர் ராகேஷ் சாராங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் நானா படேகரை கைது செய்ய வலியுறுத்தி மகளிர் காங்கிரசார் ஒஷிவாரா போலீஸ் நிலையம் முன் போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story