பொள்ளாச்சியில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்


பொள்ளாச்சியில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:30 PM GMT (Updated: 12 Oct 2018 6:55 PM GMT)

பொள்ளாச்சியில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் ஏலச்சீட்டு நிறுவனம் உள்ளது. இதில் சீட்டு நடத்தி வந்தவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் சிவ சூர்யா சிட்பண்ட் என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இவர்களுக்கு தமிழகம் முழுவதும் 21 நிறுவனங்கள் உள்ளன. பொள்ளாச்சியில் தினக்கூலி செல்லும் பொதுமக்கள், தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சீட்டுக்கு பணம் செலுத்தினார்கள்.

ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தப்பட்டது. ஆனால் பணத்தை கொடுக்காமல் உரிமையாளர் ஏமாற்றி விட்டார்.தற்போது நிறுவனத்தில் மேலாளர் மட்டும் இருக்கிறார். பொள்ளாச்சியில் மட்டும் 200 பேரிடம் இருந்து ரூ.45 லட்சம் வரை சீட்டு நடத்தி மோசடி செய்துள்ளனர். எனவே நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–

சிவ சூர்யா சிட்பண்ட் என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக, அதன் உரிமையாளரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் உள்ளார். தற்போது பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தி ஏமாந்து விட்டோம் என்று புகார் மனு கொடுத்து உள்ளனர். இந்தநிலையில் சிட்பண்ட் மேலாளரிடம் சீட்டு எடுத்தவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். மேலும் பொதுமக்கள் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story