சிவகாசியில் குவியும் பட்டாசு வியாபாரிகள்; பல வெடிகளுக்கு இப்போதே தட்டுப்பாடு


சிவகாசியில் குவியும் பட்டாசு வியாபாரிகள்; பல வெடிகளுக்கு இப்போதே தட்டுப்பாடு
x
தினத்தந்தி 13 Oct 2018 3:45 AM IST (Updated: 13 Oct 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளில் வெடிகளை வாங்கி செல்ல வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்து குவிந்துள்ளனர். பல வெடிகளுக்கு இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகாசி,

அடுத்த மாதம் 6–ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக சிவகாசியில் உள்ள சுமார் 870 பட்டாசு ஆலைகளில் பலதரப்பட்ட வெடிகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உற்பத்தி குறைவு என்று கூறப்படுகிறது. டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் பல பட்டாசு ஆலைகளில் உற்பத்தி குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கேட்டு சிலர் சுப்ரீம்கோட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடத்து வந்த நிலையில் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்தியை தானாகவே முன் வந்து குறைத்து கொண்டன. கடந்த சில வாரங்களாக விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில மழை பெய்த வண்ணம் இருந்தது. இது பட்டாசு உற்பத்தி குறைவுக்கு பெரும் காரணமாக அமைந்து விட்டது.

இந்த நிலையில் டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள சில பகுதிகளை தவிர மற்ற இடங்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பாட்டாசுகள் செல்வதிலும் சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் வரை 70 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகள் சிவகாசிக்கு வர தொடங்கி உள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை இங்குள்ள மொத்த விற்பனை கடைகளில் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கிறார்கள். இவர்கள் கேட்கும் பட்டாசுகளில் சரவெடி, தரைச்சக்கரம், ரோல்கேப்வெடி போன்றவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லட்சுமி வெடிக்கு எப்போதுமே பெரிய வரவேற்பு உண்டு. இந்த நிலையில் தற்போது லட்சுமி வெடிக்கும் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றப்படி இளைஞர்களுக்கு என புது,புது வெடிகள் அதிகஅளவில் சந்தைக்கு வந்துள்ளதால் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

இன்னும் 3 வாரங்களே தீபாவளிக்கு உள்ளதால் பட்டாசு விற்பனை சூடுபிடித்து வருகிறது. இதன் காரணமாக வெளியூர் வியாபாரிகள் சிவகாசியில் குவிந்து வருகின்றனர். இதனால் சிவகாசி மற்றும் சாத்தூரில் உள்ள விடுதிகளில் பட்டாசு வியாபாரிகளின் கூட்டம் தான் அதிகமாக காணப்படுகிறது. பலர் இங்குள்ள கடைகளில் விலைபட்டியல்களை வாங்கி வந்து விடுதிகளில் அமர்ந்து எந்த கடையில் வாங்கினால் லாபம் அதிகம் இருக்கு என்று முடிவு செய்து பின்னர் பட்டாசு கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். இதனால் இங்கு கடந்த சில நாட்களாக வெளியூர் வியாபாரிகளின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இவர்களை குறி வைத்து சிவகாசி பஸ் நிலையம், ரெயில்நிலையம், பிரபல விடுதிகளின் வெளியே இடைத்தரகர்கள் நிற்கிறார்கள். இவர்கள் அதிக தள்ளுப்படியில் பட்டாசுகளை மொத்தமாக வாங்கி தருவதாக கூறி அழைத்து செல்கிறார்கள்.

பல இடங்களில் மோசடி நடக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற இடைத்தரகர்களால் மோசடி சம்பவங்கள் நடைபெற்று போலீசில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி பகுதியில் தற்போது வெளியூர் வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளதால் நகரின் முக்கிய பகுதியில் அதிகஅளவில் போலீசாரை நியமித்து கண்காணிப்பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அப்போது தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும். லட்சக்கணக்கான பணத்துடன் வரும் வியாபாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story