சாவில் மர்மம்: தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து 2–வது நாளாக போராட்டம்


சாவில் மர்மம்: தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து 2–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2018 11:00 PM GMT (Updated: 12 Oct 2018 8:30 PM GMT)

தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோட

மொடக்குறிச்சி அருகே உள்ள தூரப்பாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் குப்பன் (வயது 60). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 10–ந்தேதி குப்பனுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குப்பன் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் குப்பனின் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து, குப்பனின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள், ‘குப்பனின் சாவில் மர்மம் உள்ளது. அவரது சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை, அவருடைய உடலை வாங்கமாட்டோம்’ என்று கூறி தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக குப்பனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் குப்பனின் மகன் மணிகண்டன், 100–க்கும் மேற்பட்டோருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர், ‘எனது தந்தை பெருமாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு கூலி வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் தோட்டத்து உரிமையாளரிடம் கூலி பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு எனது தந்தையின் வயிற்றில் எட்டி உதைத்து, கட்டையால் தாக்கி உள்ளார். இதனால் தான் எனது தந்தை இறந்துள்ளார். எனவே எனது தந்தையின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து, அவரது சாவுக்கு காரணமான தோட்டத்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட சக்தி கணேசன், ‘சம்பந்தப்பட்ட தோட்டத்து உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் உடலை வாங்கி செல்லுங்கள்’ என்றார். அதற்கு குப்பனின் உறவினர்கள், ‘தோட்டத்து உரிமையாளரை கைது செய்தால் மட்டுமே நாங்கள் குப்பனின் உடலை வாங்கிச்செல்வோம்’ என்று உறுதியாக கூறிவிட்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story