மாவட்ட செய்திகள்

நோயாளிகளிடம் தேவையற்ற சோதனைகளுக்கு பரிந்துரைக்காதீர்; டாக்டர்களுக்கு, துணை ஜனாதிபதி வேண்டுகோள் + "||" + Do not recommend unnecessary tests to patients

நோயாளிகளிடம் தேவையற்ற சோதனைகளுக்கு பரிந்துரைக்காதீர்; டாக்டர்களுக்கு, துணை ஜனாதிபதி வேண்டுகோள்

நோயாளிகளிடம் தேவையற்ற சோதனைகளுக்கு பரிந்துரைக்காதீர்; டாக்டர்களுக்கு, துணை ஜனாதிபதி வேண்டுகோள்
நோயாளிகளிடம் தேவையற்ற சோதனைகள் செய்து வருமாறு பரிந்துரைக்காதீர்கள். பணியின் போது நோயாளிகளிடம் எப்போதும் இன்முகத்தோடு இருங்கள் என்று டாக்டர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டார். புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் 9–வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. ஜிப்மர் இயக்குனர் விவேகானந்தம் வரவேற்றுப் பேசினார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்துகொண்டு 466 பேருக்கு பட்டங்களையும், தங்கப்பதக்கங்களையும் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இந்தியாவில் உள்ள சிறந்த 5 மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஜிப்மர் விளங்குகிறது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளை வழங்குவதோடு மட்டுமின்றி இந்த மருத்துவமனை ஏராளமான நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது. 1823–ம் ஆண்டு பிரெஞ்சு அரசால் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டது.

இந்த கல்லூரி சிறிது காலம் தன்வந்திரி மருத்துவக்கல்லூரி என்று அழைக்கப்பட்டது. கடந்த 1964 முதல் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு பெயரில் ஜவகர்லால் நேரு மருத்துவ உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கடந்த 10 ஆண்டுகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக இருப்பதுடன் நாட்டிலேயே 3–வது சிறந்த மருத்துவ கல்லூரியாக திகழ்கிறது.

கல்வியில் புதுமையை புகுத்துதல், நோயாளிகள் சார்ந்த ஆராய்ச்சி, மக்களின் சுகாதாரம், உயர்ந்த சேவை போன்றவற்றை தொலைநோக்கு சிந்தனையாக கொண்டு செயல்படுவதற்கு பேராசிரியர்களும், மருத்துவ மாணவர்களும் இலக்கு நிர்ணயித்து பணியாற்ற வேண்டும். இது தொலைநோக்கு சிந்தனையை அடிப்படையாக கொண்டு உங்களது தொலைநோக்கு அறிக்கையில் தெரிவித்துள்ளபடி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு கருணை நெறிமுறையுடன் கூடிய வலுவான சுகாதார வல்லுனர்களை உருவாக்கவும், தொடர் சுகாதார கவனிப்பில் உயர்வான சேவையையும் வழங்கவேண்டும்.

ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்பது ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒட்டுமொத்த குழுவினரும் இணைந்து பணியாற்றும் நீண்ட, நெடிய கடினமான நடவடிக்கை ஆகும். இந்த நாட்டில் உயர்தரமான கல்வியை பெறும் குறிப்பிட்ட சில மாணவர்களாக நீங்கள் திகழ்வது உங்களுக்கு கிடைத்த பாக்கியம். பரந்து விரிந்த பெருமளவிலான மக்கள்தொகையை கொண்ட இந்த நாட்டில் சுகாதார சேவைகள் அதிகம் தேவைப்படுகிறது. ஆரம்ப சுகாதார மையமாக இருந்தாலும், உயர்சிறப்பு மருத்துவமனைகளான ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்கு செல்லும்போது இன்னும் அதிக மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

உலகம் முழுவதும் இன்னும் தரமான மருத்துவ சேவை கிடைக்கவில்லை. நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களுக்கு குறைந்த செலவில் உயர் சிகிச்சையும் கிடைக்கவில்லை. எனவே ஒவ்வொருவருக்கும் தரமான, சிறப்பான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மிகவும் சிறப்புமிக்க பிரதமரின் ஜன்ஆரோக்யா திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் இதுவரை நாம் கண்டிராத மாபெரும் சுகாதார திட்டமாகும்.

குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை வழங்குவதற்கான இந்த உன்னதமான முன்முயற்சியில் உங்களை போன்றவர்கள் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

நாம் எவ்வளவுதான் படித்து இருந்தாலும் 5 வி‌ஷயங்களை மறக்கக்கூடாது. அவை பெற்றோர், பிறந்த இடம், தாய்மொழி, நமது இந்தியா, குரு ஆகியவை ஆகும். வீட்டில் எப்போதும் தாய்மொழியிலேயே பேசுங்கள். குழந்தைகளையும் தாய்மொழியிலேயே பேச சொல்லுங்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழும் அனைவரும் இந்தியர் என்ற உணர்வுடன் வாழவேண்டும்.

பட்டங்கள் பெற்றுள்ள நீங்கள் தொடர்ந்து படிக்கவேண்டும். வெளிநாடு செல்லுங்கள். உழைத்து சம்பாதித்துவிட்டு வந்து சொந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்யுங்கள். புதுவை அரசு ஜிப்மருக்கு மேலும் 50 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. இதற்காக அரசை பாராட்டுகிறேன். நம்மிடையே அரசியல் வேறுபாடு இருந்தாலும் அது தேர்தலோடு போய்விட்டது. அதன்பின் அனைவரும் மக்களுக்காக உழைக்கிறோம்.

புதுவை கவர்னர் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டுள்ளதை பாராட்டுகிறேன். இதில் மக்களும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்தியா இப்போது வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் 3–வது சிறந்த பொருளாதாரம் மிக்க நாடாக மாறும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

டாக்டர்கள் தங்கள் நேரத்தை நோயாளிகளுடன் செலவிட வேண்டும். நோயோடு வருபவர்களை தேவையற்ற சோதனைகள் செய்து வருமாறு பரிந்துரைக்காதீர்கள். எப்போதுமே பணியில் இன்முகத்தோடு இருங்கள்.

சென்னை, கேரளாவில் சமீபத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இதற்கு யார் காரணம்? ஆக்கிரமிப்புகள்தான். இவ்வளவு வெள்ளம் இருந்தும் கேரளாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனக்கு இப்போது 68 வயது ஆகிறது. ஆனால் நாள்தோறும் ஒரு மணிநேரம் பேட்மிண்டன் விளையாடுகிறேன். நமக்கு நல்ல பழக்கவழக்கங்கள் இருக்கவேண்டும். நமது பாரம்பரிய உணவுகள் சத்துமிக்கதாக உள்ள நிலையில் பிற உணவு வகைகளை வாங்கி சாப்பிடுவதில் அக்கறை காட்டவேண்டாம்.

இவ்வாறு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, கவர்னர் கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், முன்னாள் முதல்–அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி, எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ஜிப்மர் தலைவர் மகராஜ் கி‌ஷன் பான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் ஜிப்மர் முதல்வர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. “பிரேத பரிசோதனை அறிக்கைகள் தாமதப்படுத்தப்படுகின்றன” ஐகோர்ட்டில், தடயவியல் நிபுணர் தகவல்
பிரேத பரிசோதனை அறிக்கைகள் தாமதப்படுத்தப்படுகின்றன என்று மதுரை ஐகோர்ட்டில் தடயவியல் நிபுணர் தெரிவித்தார்.
2. கோபி, பெருந்துறை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3¾ லட்சம் பறிமுதல்
கோபி, பெருந்துறை பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
3. கோபி, சிவகிரியில் பறக்கும் படை வாகன சோதனை: உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5¼ லட்சம் பறிமுதல்
கோபி, சிவகிரியில் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. பல்லடம் தொழிலதிபரின் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3–வது நாளாக சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பல்லடத்தை சேர்ந்த தொழிலதிபரின் பங்களா, மில் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 3–வது நாளாக சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
5. திருப்பூரில் பிரபல சினிமா தியேட்டரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
திருப்பூரில் பிரபல சினிமா தியேட்டரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.