சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பாரம்பரியத்துக்கு விடுக்கப்பட்ட சவால்’


சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பாரம்பரியத்துக்கு விடுக்கப்பட்ட சவால்’
x
தினத்தந்தி 13 Oct 2018 11:00 PM GMT (Updated: 13 Oct 2018 6:49 PM GMT)

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது, பாரம்பரியத்துக்கு விடுக்கப்பட்ட சவால் என்று அருமனையில் நடந்த போராட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக கூறினார்.

அருமனை,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பை கூறியது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள மாநில அரசு இறங்கியுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சபரிமலையின் பாரம்பரிய விதிகளை சீர்குலைக்க கூடாது என்று அய்யப்ப பக்தர்கள் கூறுகிறார்கள். மேலும் கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டாலும் சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று பெண்களும் ஆங்காங்கே திரண்டு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் கேரள மாநில அரசை கண்டித்தும், சபரிமலைக்கு எதிரான தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று குமரி மாவட்டம் அருமனை சந்திப்பில் மேல்புறம் ஒன்றிய சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும், அய்யப்ப பக்தர்களும் கலந்து கொண்டனர். அப்போது சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று பெண்கள் உறுதிமொழி எடுத்தனர். தீர்ப்பை அமல்படுத்த முயற்சிக்கும் கேரள மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்து சமய பாரம்பரிய கலாசாரம், பண்பாடு போன்றவற்றை பாதுகாப்பதில் பெண்களுக்கும் பங்கு உண்டு. சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்லக்கூடாது என்பது காலம், காலமாக பின்பற்றக்கூடிய முறையாகும். அதை நாங்கள் மீற மாட்டோம். சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்பது அறிவியலும், உடலியலும் சார்ந்ததாகும்.

அரசியல் சட்டம் 25-வது பிரிவு மத நம்பிக்கைகளை காக்க வேண்டும் என்பதாகும். ஆனால் நீதிபதிகளின் தீர்ப்பு எதிர்மாறாக வந்துள்ளது. இது நமது பாரம்பரியத்தின் மீது விடுக்கப்பட்ட சவாலாகும்.

சபரிமலைக்கு ஆதரவாக தீர்ப்பு கூறிய பெண் நீதிபதியின் கருத்து, மத நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டும் என்பதாகும். பண்பாடு என்பது தான் இந்தியாவின் உயிர் மூச்சு. அதனை சிதைக்க எந்த இந்து குடும்பமும் தயாராகாது. இயற்கையாகவே பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்ற நீதி உள்ளது. இந்து மதத்தை படித்த கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார். ஆண்டாளை பழித்தவரும் அடங்கி போய் விட்டார். அதுபோன்று கேரள கம்யூனிஸ்டு அரசும் திருந்தக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை. இந்து உணர்வுகளை மதிக்காத அரசியல் கட்சிகளுக்கு இந்துக்கள் வாக்களிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்துக்கு மேல்புறம் ஒன்றிய சபரிமலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் முத்துக்கிருஷ்ணன், இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் செல்லன், மாற்றுத்திறனாளிகள் சங்க ஆலோசகர் ராமச்சந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன், தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story