கஞ்சா கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் அளித்த மதுரை வாலிபர் ஆந்திராவில் படுகொலை
கஞ்சா கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் அளித்த மதுரையை சேர்ந்த வாலிபர் ஆந்திராவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த கஞ்சா கடத்தல் கும்பல்களுக்கும், ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் உள்ள கஞ்சா விற்பனையாளர்களுக்கும் தொடர்பு உள்ளது. இந்த கும்பல்களை மடக்க போலீசாருக்கு சிலர் ரகசியமாக தகவல் அளிக்கின்றனர். எந்த வழியாக கஞ்சா கடத்துகிறார்கள், எந்த வாகனத்தில் கடத்திச் செல்லப்படுகிறது? என்பது குறித்தும் தகவல் கொடுக்கிறார்கள்.
மதுரை சர்வேயர்காலனி கொடிக்குளம் முதல் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகன் நீலமேக அமரன் (வயது 33). இவர் சில ஆண்டுகளாக ஆந்திராவில் வசித்து வந்தார். அங்கு நடைபெறும் கஞ்சா விற்பனை தொடர்பாக அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் அளிக்கும் உளவாளியாக(இன்பார்மர்) இருந்துள்ளார்.
சம்பவத்தன்று ஆந்திர மாநிலம் அன்னாவரம் பகுதியில் உள்ள ஒரு சோதனைச் சாவடி அருகே நீலமேக அமரன் நின்று கொண்டிருந்தார். அப்போது கஞ்சா கடத்தலில் தொடர்புடைய சிலர் இரு கோஷ்டியாக மோதிக்கொண்டனர்.
அந்த சமயத்தில் நீலமேக அமரன் அங்கு நிற்பதை கண்ட அவர்கள், கஞ்சா கடத்தல் தொடர்பாக அவர் போலீசாருக்கு தகவல் கொடுக்க நிற்பதாக கருதினர். உடனே தங்களது மோதலை கைவிட்டு ஒன்று சேர்ந்து ஆத்திரத்தில் நீலமேக அமரனை பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய அந்த கும்பல் பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே ஆந்திராவில் கொல்லப்பட்ட நீலமேக அமரன், மதுரையை சேர்ந்த போலீஸ்காரர் என்றும், கஞ்சா கடத்தல் கும்பல் அவரை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கேட்டபோது, நீலமேக அமரன் கஞ்சா கடத்தல் கும்பலால் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டு இறந்தவர் போலீஸ்காரர் இல்லை என்றும் ‘போலீஸ் உளவாளி’ என்றும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து நீலமேக அமரனின் வீட்டுக்கு மதுரை மாவட்ட போலீசார் விசாரணைக்காக சென்றனர். ஆனால் வீடு பூட்டிக் கிடந்தது. அக்கம் பக்கத்தில் கேட்டபோது குடும்பத்தினர் சென்னையில் வசிப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னைக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.