பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாணவர் காங்கிரசார் சைக்கிள் ஊர்வலம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாணவர் காங்கிரஸ் சார்பில் நேற்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி,
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர் காங்கிரஸ் சார்பில் நேற்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது. புதுவை பழைய பஸ்நிலையம் அருகே இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து சைக்கிளை ஓட்டிச்சென்றார்.
ஊர்வலத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி மற்றும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவர்கள் மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி சென்றனர். ஊர்வலம் அண்ணாசாலை, காமராஜர் சாலை, பெரியார் சிலை சந்திப்பிற்கு சென்று மீண்டும் காமராஜர் சாலை, நேரு வீதி வழியாக தலைமை தபால் நிலையம் முன்பு முடிவடைந்தது. அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிறிது தூரம் மட்டும் சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.