திருச்சி விமான விபத்து: மத்திய குழுவினர் நாளை விசாரணை


திருச்சி விமான விபத்து: மத்திய குழுவினர் நாளை விசாரணை
x
தினத்தந்தி 13 Oct 2018 11:15 PM GMT (Updated: 13 Oct 2018 8:26 PM GMT)

திருச்சி விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மத்திய குழுவினர் நாளை வருகிறார்கள்.

செம்பட்டு,

திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு விமானசேவையும், துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி விமானநிலையத்தில் இருந்து துபாய்க்கு நேற்று முன்தினம் அதிகாலை 1.15 மணிக்கு ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 130 பயணிகளுடன் புறப்பட்டது. விமானத்தை விமானி கணேஷ்பாபு ஓட்டினார். துணை விமானி அனுராக் மற்றும் பணிப்பெண்கள் என 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் ஓடுதள பாதையில் குறிப்பிட்ட தூரம் வரை வேகமாக சென்று மேலே எழும்ப வேண்டும். ஆனால் அந்த விமானம் ஓடுதள பாதை முடியும் வரை சென்று அதன்பிறகே மேலே எழும்பியது.

இதனால் தரையில் இருந்து மிக குறைந்த உயரத்தில் பறந்த அந்த விமானம் திருச்சி-புதுக்கோட்டை சாலையையொட்டி உள்ள விமான நிலைய சுற்றுச்சுவரின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த ஆண்டெனாவில் உரசியது. பின்னர் விமானத்தின் இரண்டு சக்கரங்களும் சுற்றுச்சுவரில் மோதி மேலே பறந்தது. விமானத்தின் சக்கரங்கள் மோதியதில் இரண்டு இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும், விமானம் உரசியதில் ஓடுதள பாதையை அடையாளம் காட்டும் விளக்குகள், வழிகாட்ட உதவும் ஆண்டெனாக்கள்(டவர்), அவற்றை கட்டுப்படுத்தும் கருவி ஆகியவை சேதம் அடைந்தன. இந்த சம்பவத்திற்கு பிறகும் விமானம் தொடர்ந்து பறந்து சென்றது. அதிகாரிகள் நடவடிக்கைக்கு பிறகு விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த பெரும் விபத்தில் இருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கி உள்ளனர். விமான நிலைய ஆணைய குழும அதிகாரிகள் 3 பேர் நேற்று முன்தினம் மாலை திருச்சி விமானநிலையத்துக்கு வந்தனர். அவர்கள் விமான நிலைய இயக்குனர் குணசேகரனிடம் விபத்து நடந்தது எப்படி? என கேட்டு அறிந்தனர். பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆய்வு நடத்திய அவர்கள், விமானம் மோதியதில் சேதம் அடைந்த டவர் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

இதேபோல் நேற்று முன்தினம் பகல் மும்பை விமானநிலையத்துக்கு சென்ற பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழுவினர் அங்கு சேதம் அடைந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமானத்தை பார்வையிட்டனர். அந்த விமானத்தில் தொழில்நுட்ப கருவிகள் முறையாக இயங்கியதா?. விபத்துக்கு காரணம் என்ன? என்று ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வு முடிந்ததும், தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழுவினர் திருச்சிக்கு வந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், அப்போது தான் விமானிகளின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா? அல்லது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்த முழு விபரம் தெரியவரும் என்று திருச்சி விமானநிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே விமானம் மோதியதில் உடைந்த திருச்சி விமானநிலைய வளாக சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்பட்டது. சுவரின் வெளிப்பகுதியில் மரப்பலகை வைத்து அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் விமானநிலைய ஆணைய குழும அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக ஆய்வு நடத்தினார்கள்.

இந்தநிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லியில் இருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து பொது இயக்குனரக அதிகாரிகள் அடங்கிய (மத்திய விசாரணை குழு) குழுவினர் திருச்சிக்கு வர உள்ளனர். இந்த குழுவினர் நாளை(திங்கட்கிழமை) திருச்சி விமானநிலையம் வந்து விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story