கறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது


கறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
x
தினத்தந்தி 14 Oct 2018 4:15 AM IST (Updated: 14 Oct 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடியில் வியாபாரிகள் சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்த சங்கம் உருவாக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதன் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். இந்தநிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கறம்பக்குடியில் சில பகுதிகளை பிரித்து தனியாக வியாபாரிகள் சங்கம் உருவானது. இதன் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்றோர் 9 ஆண்டுகளாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் 2018-2021-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒரு மித்த கருத்து ஏற்படாததால் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கு 3 பேர், செயலாளர் பதவிக்கு 3 பேர், பொருளாளர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்டனர். இதனால் கடந்த 5 நாட்களாக பிரசாரம் களை கட்டியது. உள்ளாட்சி, பொதுத்தேர்தல் நடைபெறுகிறதோ என எண்ணும் அளவிற்கு வியாபாரிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை கறம்பக்குடி பஸ் நிலையம் அருகே தனியார் அரங்கில் வியாபாரிகள் சங்க தேர்தல் நடந்தது. அரங்கத்திற்குள் வாக்குவரிமை உள்ள உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். உறுப்பினர் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னர் அவர்களிடம் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவி வேட்பாளர்களுக்கான வாக்கு சீட்டுகள் வழங்கப்பட்டன. அதை பெற்ற உறுப்பினர்கள் மறைவான பகுதிக்கு சென்று வாக்களித்தனர். பின்னர் அதற்குரிய பெட்டிகளில் வாக்குச்சீட்டுகளை போட்டனர்.

மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வியாபாரிகள் சங்க தலைவராக ஏ.கே.எஸ்.சத்தியமூர்த்தி, செயலாளராக வெண்ணிலா அய்யப்பன், பொருளாளராக வேல்சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலையொட்டி கறம்பக்குடி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story