விலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்பு


விலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2018 4:15 AM IST (Updated: 14 Oct 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

விலை வீழ்ச்சி எதிரொலியால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தேனி,

தேனி, குன்னூர், அம்மச்சியாபுரம், அரப்படித்தேவன்பட்டி, திருமலாபுரம், நாகலாபுரம், ஸ்ரீரெங்கபுரம், தர்மாபுரி, பூமலைக்குண்டு, தாடிச்சேரி, சீலையம்பட்டி, பாலார்பட்டி, உப்புக்கோட்டை, குச்சனூர் உள்பட தேனி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யும் தக்காளி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை, மதுரை, திண்டுக்கல் பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

வெளிமாவட்ட வியாபாரிகள் தேனிக்கு வந்து விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரடியாக வாங்கிச் செல்கின்றனர். ஆனால், தக்காளி விலை தற்போது வீழ்ச்சி அடைந்து உள்ளது. சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ ரூ.4 முதல் ரூ.7-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் தோட்டங்களில் தண்ணீர் தேங்கி, தக்காளி பழங்களில் அதிகம் நீர்கோர்த்து விடுகிறது. இதனால் பழங்கள் செடிகளிலேயே வெடித்து வீணாகி வருகிறது.

வெடிக்காத பழங்களை பறித்தாலும் பெட்டிகளில் அடுக்கும் போது அதிகம் சேதம் அடைந்து விடுகிறது. இதனால், தக்காளிகளை சாலையோரமாக விவசாயிகள் கொட்டி விடுகின்றனர். விலை வீழ்ச்சி ஒருபுறம், மழையால் பாதிப்பு மற்றொரு புறம் என தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.



Next Story