தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் பரபரப்பு: ‘எடப்பாடியார் பேரவை’ என்ற பெயரில் சுவரொட்டி


தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் பரபரப்பு: ‘எடப்பாடியார் பேரவை’ என்ற பெயரில் சுவரொட்டி
x
தினத்தந்தி 14 Oct 2018 4:45 AM IST (Updated: 14 Oct 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி நேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

தேனி,

தேனி மாவட்ட எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சியை சிறப்பாக நடத்தி வரும் ‘இரும்பு மனிதர்’ என்ற அடைமொழியோடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்களும் அந்த சுவரொட்டியில் உள்ளன.

அ.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.பால்பாண்டியன் என்பவர் பெயரில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. பால்பாண்டியன் கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்த அவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வந்த நிலையில், அவர் திடீரென எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டி உள்ளது தேனி மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story