தேவாரத்தில் பரபரப்பு நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டுயானை


தேவாரத்தில் பரபரப்பு நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டுயானை
x
தினத்தந்தி 14 Oct 2018 9:30 PM GMT (Updated: 14 Oct 2018 4:47 PM GMT)

தேவாரத்தில் காட்டு யானை நள்ளிரவில் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவாரம், 

தேவாரம் மலையடிவார பகுதியில் ஒரு காட்டுயானை முகாமிட்டு அதிகாலை நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது, தோட்டங்களில் இரவு காவல் பணியில் உள்ள விவசாயிகளை தாக்குவது என்று அட்டகாசம் செய்துவருகிறது. இதுவரை யானை தாக்கி 7 பேர் இறந்து உள்ளனர். இந்த யானையை பிடித்து வெளிமாவட்டத்துக்கு கொண்டு செல்ல டாப்சிலிப்பில் இருந்து பயிற்சி பெற்ற இரண்டு கும்கியானைகள் ஆகஸ்டு மாதம் கொண்டுவரப்பட்டது.

அப்போது காட்டுயானை வெளியே வராமல் இருந்தது. மேலும் கும்கியானைகளுக்கு இனப்பெருக்க காலம் என்பதால் அவற்றை முகாமிற்கு திரும்ப அனுப்பி விட்டனர்.

தற்போது கடந்த ஒருவாரமாக மீண்டும் காட்டுயானை அதிகாலையில் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இதனால் தோட்டங்களுக்கு சென்றுவர விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தேவாரம் பேரூராட்சி 18-வது வார்டு பகுதியான பென்னிகுவிக்நகர், வண்ணமயில் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் காட்டுயானை புகுந்தது. அந்த பகுதியில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. நள்ளிரவு பணியில் இருந்தவர்கள் யானையை கண்டதும் அறைக்குள் ஓடி கதவை அடைத்து கொண்டனர். இந்தநிலையில் யானை ஊருக்குள் புகுந்ததை அடுத்து நாய்கள் குரைத்தன. மாடுகள் மிரண்டு கத்தின. இதை அறிந்த பொதுமக்கள் நள்ளிரவில் வீட்டு மாடியில் நின்றவாறு சத்தம் போட்டனர். இதையடுத்து யானை வன பகுதியை நோக்கி ஓடி விட்டது. யானை ஊருக்குள் புகுந்த சம்பவத்தால் தேவாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story