தொழிலாளி மர்ம சாவு: உறவினர்கள் போராட்டம்; தோட்ட உரிமையாளர் கைது


தொழிலாளி மர்ம சாவு: உறவினர்கள் போராட்டம்; தோட்ட உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2018 4:00 AM IST (Updated: 15 Oct 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு அவரது உடலை உறவினர்கள் வாங்கிச்சென்றனர்.

மொடக்குறிச்சி,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள தூரபாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் குப்பன் (வயது 60). இவர் வயிற்றுவலி காரணமாக கடந்த 10–ந்தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி குப்பன் மறுநாள் பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து குப்பனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவருடைய உறவினர்கள் குப்பனின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த தோட்டத்து உரிமையாளர் ஒருவர் கூலி பிரச்சினை தொடர்பாக அடித்ததால் தான் குப்பன் இறந்துள்ளார். எனவே அவரை கைது செய்ய வேண்டும். அதுவரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

அதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தோட்டத்து உரிமையாளரான பெருமாபாளையத்தை சேர்ந்த லோகநாதன் (54) என்பவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு அருகே உள்ள சோலார் பஸ் நிறுத்தம் பகுதியில் லோகநாதன் நின்று கொண்டு இருப்பதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சோலார் பகுதிக்கு விரைந்து சென்று லோகநாதனை கைது செய்தனர். இதனால் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த குப்பனின் உறவினர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு நேற்று குப்பனின் உடலை வாங்கிச்சென்றனர்.


Next Story