பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களின் துயரம் அதிகரிக்கிறது - திரிபுரா முன்னாள் முதல்–மந்திரி மாணிக் சர்க்கார் பேச்சு


பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களின் துயரம் அதிகரிக்கிறது - திரிபுரா முன்னாள் முதல்–மந்திரி மாணிக் சர்க்கார் பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2018 11:15 PM GMT (Updated: 14 Oct 2018 7:25 PM GMT)

ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களின் துயரம் அதிகரிக்கிறது என்று திரிபுரா முன்னாள் முதல்–மந்திரி மாணிக் சர்க்கார் கூறினார்.

திருப்பூர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் ராயபுரம் ரவுண்டானா பகுதியில் முப்பெரும் விழா நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கவேல், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், குணசேகரன், காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்–மந்திரி மாணிக் சர்க்கார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

கம்யூனிஸ்டு கட்சி உழைப்பாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், ஜனநாயகத்தை நேசிக்க கூடிய அனைவரையும் நேசிக்கும் இயக்கமாக உள்ளது. நமது நாடு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. சுதந்திரம் பெற்றும் 71 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சி அடைந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது அனைத்து தரப்பிலும் இன்றைக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் மக்களின் துயரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித உதவியும் செய்யவில்லை. கடந்த 4 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆனால் இதனை முறியடிக்க மக்களை பிளவுபடுத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பா.ஜனதாவும் முயற்சி செய்கிறது. நாட்டின் மகத்துவமான மதச்சார்பின்மையை காலில் போட்டு மிதித்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம், சமூகம் மற்றும் வெளியுறவு கொள்கைகளில் அமெரிக்காவின் சகோதரனாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் நேரடியாக பா.ஜனதா ஆட்சி நடத்துகிறது.

தமிழகத்திலும் பா.ஜனதாவே மறைமுகமாக ஆட்சியை நடத்துகிறது. மாநில அரசுக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளன. ஆனால் இன்றைக்கு மாநில அரசை, மத்தியில் இருப்பவர்கள் மிரட்டுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பா.ஜனதா அல்லாத மதசார்பற்ற அரசை நிறுவ நாம் முயற்சி செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் இடதுசாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து, பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டாளி கட்சிகளை வீழ்த்த வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதாவை மட்டுமின்றி, அதன் கூட்டாளியான அ.தி.மு.க.வையும் வரும் தேர்தலில் வீழ்த்துவதன் மூலமே தமிழகத்தை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story