பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரப்பணிகள்; கலெக்டர் சிவஞானம் தகவல்
பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் சிவஞானம் கூறினார்.
விருதுநகர்,
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சுகாதாரப்பணிகள் குறித்து கலெக்டர் சிவஞானம் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் கூறியதாவது:–
விருதுநகர் மாவட்டத்தில் தொடர் நடவடிக்கையின் மூலம் டெங்கு மற்றும் வைரஸ் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விருதுநகர் நகராட்சி பகுதிகள், பள்ளி மற்றும் அரசுத்துறை அலுவலக வளாகங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்கும் வகையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளவற்றை உறுதி செய்யும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தினமும் அதிகாலை நேரங்களில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை தினசரி கழுவி சுத்தம் செய்தும் கொசுக்கள் உள்ளே புகாதவாறு மூடி வைத்தும், தங்கள் வீட்டின் வெளியிலும், சுற்றுப்புறத்திலும் நீர் தேங்காதவாறும், தேவையற்ற உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காதவாறும் பார்த்து கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு பணிக்கென தங்கள் வீடுகளை நாடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தில் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவிலிருந்து காத்தல் மற்றும் குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் கலெக்டர் பேசும் போது, ஒவ்வொரு பேரிடரும் எப்படி ஏற்படுகிறது அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்திருக்க வேண்டும். அவசர காலங்களில் பேரிடர் பிரிவின் மூலமாக தெரிவிக்கப்படும் அவசர செய்திகளை ஏற்றுக்கொண்டு, அதனை தவறாது பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். சமுதாயத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் பேரிடர்களை சுலபமாக எதிர்கொள்ளலாம்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் உதவுகின்ற மனப்பான்மை அனைவரிடமும் இருக்க வேண்டும். எனவே அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ–மாணவிகள் இந்த கருத்தரங்கின் வாயிலாக அறிந்து கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள் என்றார்.
பின்னர் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவிலிருந்து காத்தல் மற்றும் குறைத்தல் தொடர்பாக நடைபெற்ற வினாடி–வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சிவஞானம் பரிசு வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.