புதுவை நகரையொட்டி 50 கிலோ மீட்டரில் கிழக்கு கடற்கரை – விழுப்புரம் இணைப்பு சாலை பணி; கலெக்டர் ஆய்வு


புதுவை நகரையொட்டி 50 கிலோ மீட்டரில் கிழக்கு கடற்கரை – விழுப்புரம் இணைப்பு சாலை பணி; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Oct 2018 4:30 AM IST (Updated: 15 Oct 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

புதுவை நகரையொட்டி 50 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம் நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

வானூர்,

சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை தொழில் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் பல இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சாலை புதுவை நகருக்குள் நுழையாமல், 50 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் வகையில் புதுச்சேரி– சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அனுமந்தையில் தொடங்கி, மாத்தூர், ஆரோவில், பொம்மையார் பாளையம், மொரட்டாண்டி, பெரம்பை, தென்னல் வழியாக வில்லியனூரை அருகே நவமால்காப்பேரில் புதுச்சேரி – விழுப்புரம் நெடுஞ்சாலையில் இணையும்படி அமைகிறது.

இதில் பெரும்பாலான பகுதி விழுப்புரம் மாவட்டத்தில் வருகிறது. இதற்காக நிலம் எடுக்கும் பணியை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரியா, தேசிய நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அதிகாரி ராமநாதன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று வந்தனர்.

முதலில் புதுவையை அடுத்த மொரட்டாண்டி பகுதியில் சாலை அமையும் இடங்களை பார்வையிட்டனர். பின்னர் ஆரோவில், குயிலாப்பாளையம், மாத்தூர் ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கிராம மக்கள் திரண்டு தங்கள் குடியிருப்பு பகுதி பாதிக்காத வகையில் சாலை அமைக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் முதற்கட்டமாக அனுமந்தையில் இருந்து விழுப்புரம் சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்படுகிறது. அடுத்து விழுப்புரம் சாலை, கடலூர் கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்கப்படுகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால் சென்னையில் இருந்து கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு செல்பவர்கள் புதுவை நகருக்குள் வராமல் செல்ல முடியும். இதனால் புதுவையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.


Next Story