விவசாயிகளிடம் இருந்து பறிமுதல் செய்த வாகனங்களை விடுவிக்க கலெக்டரிடம் கோரிக்கை


விவசாயிகளிடம் இருந்து பறிமுதல் செய்த வாகனங்களை விடுவிக்க கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2018 3:45 AM IST (Updated: 16 Oct 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளிடம் இருந்து போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்த வாகனங்களை விடுவிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். அவரிடம், நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்க தலைவர் ரங்கசாமி ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதனால் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்களது தோட்டங்களில் வேலை செய்ய தினமும் காலை நேரத்தில் வெளியிடங்களில் இருந்து சொந்த வாகனங்கள் மூலம் தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். பின்னர் மாலையில் மீண்டும் அதே வாகனங்களில் தொழிலாளர்களை சொந்த பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால் தற்போது நியமிக்கப்பட்டு உள்ள வாகன போக்குவரத்து ஆய்வாளர்(செயலாக்கம்) தலைமையிலான அதிகாரிகள் விவசாயிகள் தங்களது சொந்த வாகனங்களில் தொழிலாளர்களை அழைத்து செல்லும்போது பிடித்து அபராதம் விதித்து வருகிறார். மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. ஏற்கனவே தொடர் மழை, பனி போன்ற சீதோஷ்ண நிலையில் தோட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து வந்து வேலை செய்ய வைக்க வேண்டி உள்ளது. மேலும் தற்போது கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற மலைக்காய்கறிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. தவிர உரம், மோட்டார் பம்பு செட், டீசல் விலைகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நீலகிரி மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற கலெக்டர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்த விவசாயிகளின் வாகனங்களை விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story