குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வேங்கிடக்குளத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடையை இயக்க கோரி பொதுமக்கள் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வேங்கிடக்குளத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடையை இயக்க கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 15 Oct 2018 10:45 PM GMT (Updated: 15 Oct 2018 8:33 PM GMT)

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வேங்கிடக்குளத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடையை இயக்க கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கிடக்குளம், மைக்கேல்பட்டி, தெட்சிணாபுரம், கொத்தக்கோட்டை, வள்ளிக்காடு, வெண்ணாவல்குடி, சூத்தியன்காடு, மயிலாடிகாடு, கல்யாணபுரம், தோப்புக்கொல்லை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், வேங்கிடங்குளம் கிராமத்தில் கடந்த 2004-ம் ஆண்டு அரசு டாஸ்மாக் கடை தொடங்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடை கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக சிலர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து கடை மூடப்பட்டது.

இதைத்தொடர்ந்து வேங்கிடகுளம் சுடுகாட்டிற்கு அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. தற்போது டாஸ்மாக் கடை வேண்டாம் என்றும், இந்த டாஸ்மாக் கடையால் பள்ளிக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கி டாஸ்மாக் கடையை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடினால் கள்ள சாராயம் விற்பனை அதிகரித்து விடும். எனவே வேங்கிடகுளத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கிளிக்குடி ஊராட்சி, எல்லைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் சுமார் 40 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு கடந்த ஆண்டு ஒரு நாள் கூட வேலை வழங்கவில்லை.கடந்த 10 ஆண்டுகளாக பசுமை வீடு, முதியோர் உதவித்தொகை, விதவைக்களுக்கான சலுகைகள் உள்பட எந்த ஒரு நலத்திட்டங்களும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

பொன்னமராவதி தாலுகா காரையூர் ஊராட்சி சங்கரன்பட்டியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் கொடுத்த மனுவில், இந்த கிராமத்தில் உள்ள சங்கரன் கண்மாயில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து தாசில்தார் ஒருவர் விற்பனை செய்து உள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

கந்தர்வகோட்டை தாலுகா காட்டுநாவல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் காட்டுநாவல் காலனி அருகே சாலையின் ஓரத்தில் தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெரும் பங்காற்றிய பெரியார், அண்ணா, கலைஞர், முரசொலி மாறன் ஆகியோருக்கு சிலை வைக்க முடிவு செய்து உள்ளோம். இதற்கு தகுந்த அனுமதியை வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

Next Story